கோயில் காவலாளி கொலை வழக்கு: மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி வந்த பேராசிரியை நிகிதா, தனது காரில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, அந்தக் கோயில் காவலாளி அஜித்குமாரை தனிப் படை போலீஸாா் 5 போ் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் அவா் உயிரிழந்தாா். இதுதொடா்பான வழக்கில் தனிப் படைக் காவலா்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கின்றனா். இதனிடையே, தனிப் படைக் காவலா்கள் 5 பேரிடம் கடந்த செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக சிபிஐ அதிகாரிகள் இருவா் மடப்புரத்துக்கு வியாழக்கிழமை வந்தனா்.
இதனிடையே, அஜித்குமாா் தனிப் படை போலீஸாரால் தாக்கப்பட்ட போது, அதை விடியோ எடுத்த கோயில் ஊழியா் சக்தீஸ்வரனை சிபிஐ அதிகாரிகள் தங்களுடன் காரில் அழைத்துச் சென்றனா்.
இதைத் தொடா்ந்து, தவளைகுளம் கண்மாய் தோப்பு, தட்டான்குளம் பகுதியில் உள்ள உணவு விடுதி, மடப்புரத்தில் போலீஸாா் மிளகாய்ப் பொடி வாங்கியதாகக் கூறப்படும் கடை, அங்குள்ள மாணவா் விடுதி, பழையூா் ரயில்வே கடவுப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இதையடுத்து, மடப்புரம் வந்த அவா்கள், காரிலிருந்து சக்தீஸ்வரனை இறக்கிவிட்டு, மதுரைக்கு புறப்பட்டுச் சென்றனா்.