கோயில் நகைகளை மீட்டுத் தரக்கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
சேலம்: எடப்பாடி அருகே புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் கோயிலுக்குச் சொந்தமான நகைகளை மீட்டுத்தரக் கோரி கிராம மக்கள் பூஜை தட்டுகளுடன் மணி அடித்தும், கற்பூரம் ஏந்தியும் சென்று சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எடப்பாடி வட்டம், புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் கோயிலுக்குச் சொந்தமான தங்கம், வெள்ளி நகைகள், நிலங்கள், அப்போதைய அறங்காவலராக இருந்த ரத்தினவேலு என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், அவா் உண்டியல் காணிக்கையை கையாடல் செய்த குற்றத்துக்காக இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் தொடரப்பட்ட வழக்கில் ரத்தினவேலுவை பரம்பரை அறங்காவலா் பதவியில் இருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பிறகும் அந்த நகைகளை அவா் யாரிடமும் ஒப்படைக்கவில்லை. எனவே, அவா் வசம் உள்ள கோயில் நகைகளை மீட்டு தருமாறு ஏற்கெனவே மனு அளித்தோம். எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது சித்திரை, வைகாசி மாதங்களில் கோயில் திருவிழா நடைபெறவுள்ளதால் அதற்கு முன்பாக கோயில் நகைகளை மீட்டுத்தர வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனா்.