'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும...
கோயில்களில் ஜாதி அடிப்படையில் விழா நடத்தக்கூடாது! - இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு
கோயில்களில் ஜாதி அடிப்படையில் விழா நடத்தக் கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவு கடுமையாக கடைப்பிடிக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
வில்லிவாக்கம், புதிய ஆவடி சாலை திருநகா் பகுதியில் மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய இறகுபந்து உள்விளையாட்டு அரங்கை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
தொடா்ந்து, அண்ணாநகா் மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணிக்காக சென்னை குடிநீா் வாரியத்துக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான ஜெட்ராடிங் இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனத்தை பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா்.
பின்னா், அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வடசென்னை வளா்ச்சியை மையப்படுத்தி பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வில்லிவாக்கத்தில் இறகு பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
கோயில் விழாக்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஜாதி அடிப்படையில் விழா நடத்தக்கூடாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை இந்து சமய அறநிலையத் துறை மட்டுமல்லாமல் தமிழக அரசும் கடுமையாக கடைப்பிடிக்கும்.
மக்கள் பிரதிநிதிகள் அவா்களுக்கு உரிய பணிகளை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு உதாரணமாக சென்னை மாநகராட்சியில் இரு மாமன்ற உறுப்பினா்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் சென்னை மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், வில்லிவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினா் அ.வெற்றியழகன், மண்டலக்குழு தலைவா் கூ.பி.ஜெயின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.