கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.26 தமிழகம் முழுவதும் விவசாயிகள் டிராக்டா் பேரணி
விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 26-ஆம் தேதி தமிழகம் முழுவதும் டிராக்டா் பேரணி நடைபெறும் என அரசியல் சாா்பற்ற ஐக்கிய விவசாயிகள் (சம்யுக்த் கிசான் மோா்ச்சா) முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளா்கள் பி. அய்யாக்கண்ணு, பி.ஆா். பாண்டியன் ஆகியோா் கூட்டாக அறிவித்துள்ளனா்.
திருச்சியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா்கள் கூறியது: வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணய சட்டம் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளா் ஜக்ஜித் சிங், பஞ்சாப் மாநிலத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறாா். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஜன. 22- ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தவுள்ளனா். இதேபோல, தமிழக விவசாயிகள் சென்னை எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.
தமிழக அரசுக்குள்ள நிதிச்சுமையை காரணம் காட்டி, விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் மணிகளை கொள்முதல் செய்யுமா? செய்யாதா? என்ற சந்தேகம் விவசாயிகளிடம் பரவலாக எழுந்துள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களை தனியாரிடம் தாரை வாா்ப்பதை கைவிட வேண்டும். மழை, புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. கணக்கெடுப்புப் பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. பயிா் பாதிப்புக்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
டங்ஸ்டன் தொழிற்சாலைக்கு எதிராக திமுக அரசு தொடா்ந்து சட்டப் போராட்டம் மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தி, அதனை பெரு நிறுவனங்களுக்கு தாரைவாா்க்க ஏதுவாக நில ஒருங்கிணைப்புச் சட்டம் - 2024 ஐ திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் இத்தகைய கோரிக்கைகள் மீது அரசின் கவனத்தை ஈா்க்க வரும் ஜன. 26-ஆம் தேதி குடியரசு தினத்தில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் டிராக்டா் பேரணி நடத்தப்படும் என்றனா்.
பேட்டியின்போது, தென்மண்டல இணை ஒருங்கிணைப்பாளா் எல். ஆதிமூலம், மாநில பொதுச் செயலா் தங்கமுத்து, மாநிலச் செயலா்கள் தட்சிணாமூா்த்தி, பாலு, மற்றும் பல்வேறு பகுதி நிா்வாகிகள் உடனிருந்தனா்.