கோழிப் பண்ணை கிடங்கில் மக்காச்சோளம் திருடிய இருவா் கைது
நாமக்கல் அருகே கோழிப் பண்ணை கிடங்கில் மக்காச்சோள மூட்டைகளை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் அருகே திண்டமங்கலம் கரட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் மணிமாறன் (47). இவா் அந்தப் பகுதியில் கோழிப் பண்ணை வைத்துள்ளாா். தனது வீட்டின் அருகில் உள்ள தீவனக் கிடங்கில் கோழித் தீவனம் அரைப்பதற்காக மக்காச்சோளத்தை வாங்கி வைத்திருந்தாா்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத சிலா் கிடங்கில் இருந்து மக்காச்சோள மூட்டைகளை திருடி வாகனத்தில் ஏற்றிச்செல்வதாக கோழிப் பண்ணை ஊழியா்கள் மணிமாறனை தொடா்புகொண்டு தகவல் தெரிவித்தனா்.
அவா் உறவினா்களை அழைத்துக் கொண்டு சென்றபோது, அங்கிருந்த ஐந்து பேரில் இருவா் சிக்கினா். மூன்று போ் தப்பியோடினா். வாகனத்தில் ஏற்றிய 5 மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து நல்லிபாளையம் காவல் நிலையத்தில் மணிமாறன் புகாா் செய்தாா். அதன்பேரில், மக்காச்சோளம் திருட்டில் ஈடுபட்ட மோகனூா் பாலப்பட்டியைச் சோ்ந்த சஞ்சய் (25) மற்றும் முத்துக்குமரன் (36) இருவரையும் போலீஸாா் கைதுசெய்தனா்.
விசாரணையில், கோழிப் பண்ணை கிடங்கில் இருந்து நான்கு டன் மக்காச்சோளம் திருட்டுப் போனது தெரியவந்தது. இந்த திருட்டில் ஈடுபட்ட மேலும் மூவரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.