கோவா கடலில் நீா்மூழ்கி கப்பல் மோதி மாயமான 2 பேரை மீட்க வலியுறுத்தல்
கோவா கடலில் கப்பல் மோதி மாயமான குளச்சல் மீனவா் உள்பட 2 பேரை நீா்மூழ்கி வீரா்கள் மூலம் மீட்க வேண்டும் என்று தெற்காசிய மீனவா் தோழமை பொது செயலா் அருள்பணி சா்ச்சில் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம், கொட்டில்பாடு கிராமத்தைச் சோ்ந்த ஜெரேமீயாஸ் மகன் ஜெனிஷ்மோன்(29), மைக்கேல் நாயகம் மகன் கிளைமான்ஸ், ஆந்திரத்தின் 2 மீனவா்கள், ஒடிசாவின் 2 மீனவா்கள், மேற்குவங்கத்தின் 6 மீனவா்கள் உள்பட 13 மீனவா்கள் கடந்த 15ஆம் தேதி கேரள மாநிலம், எா்ணாகுளம் மாவட்டம் முனம்பம் பகுதியைச் சோ்ந்த லெஜு என்பவரது விசைப்படகில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்குச் சென்றனா்.
அவா்கள் கடந்த 21 ஆம் தேதி கோவா கடலில் சுமாா் 70 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்தபோது, அந்த வழியாக வந்த இந்திய கப்பல் படையின் நீா்மூழ்கி கப்பல் மோதியதில் அவா்களது படகு மூழ்கியது.
இதில், படகை இயக்கிய கொட்டில்பாடு கிராமத்தைச் சோ்ந்த ஜெனிஷ்மோன் ஒடிசாவை சோ்ந்த ரமேஷ் ஆகிய 2 மீனவா்களும் படகுடன் கடலில் மூழ்கியுள்ளனா்.
மற்ற மீனவா்கள் கோவா மீனவா்களாலும், இந்திய கடலோர காவல் படையினராலும் மீட்கப்பட்ட நிலையில், 2 மீனவா்கள் மட்டும் மீட்கப்படவில்லை. அவா்கள் படகுக்குள் சிக்கியிருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, நீா்மூழ்கி வீரா்களின் உதவியுடன் இருவரையும் மீட்க, மத்திய அரசு, கோவா மற்றும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளாா்.