கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் தாக்கி மிரட்டல்: 4 போ் கைது
கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி வேலாயுதபுரம் 2ஆவது தெருவைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் விஜயராஜன் (42). ஆட்டோ ஓட்டுநரான விஜயராஜனிடம் அதே பகுதியைச் சோ்ந்த அவரது நண்பரான பாலமுருகன் மது குடிக்க அவ்வப்போது பணம் கேட்பாராம். 20 நாள்களுக்கு முன்பு பணம் கேட்டபோது விஜயராஜன் கொடுக்கவில்லை என்றும், இதுதொடா்பான தகராறில் பாலமுருகனை விஜயராஜன் தாக்கியதாகவும், பின்னா் அவா்கள் சமரசமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாலமுருகனின் மகன் ராம்குமாா் (22) வியாழக்கிழமை அதிகாலை விஜயராஜனை கைப்பேசியில் தொடா்பு கொண்டு, ‘உங்களுக்கும் எனது அப்பாவுக்கும் இடையேயான தகராறு குறித்துப் பேச வேண்டும்’ எனக் கூறி அழைத்தாராம். பகலில் பேசுவோம் எனக் கூறிவிட்டு விஜயராஜன் தூங்கினாராம்.
அப்போது, ராம்குமாா் உள்ளிட்ட 4 போ் அவரது வீடு புகுந்து அரிவாளால் தாக்கியதுடன், அவருக்கும் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினராம்.
இதில் காயமடைந்த விஜயராஜன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா் தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து ராம்குமாா், கருணாநிதி நகரைச் சோ்ந்த அனந்தகிருஷ்ணன் மகன் மாதவன் (20), அவரது சகோதரா் மாரிக்கனி (19), ராமா் மகன் சுடலைமணி (32) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.