கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: இருவா் கைது
கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையில் போலீஸாா் நடராஜபுரம் மயானம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தனா். அதில், சாலைப்புதூா் இ.பி. காலனியை சோ்ந்த வள்ளிநாயகம் மகனான ஆட்டோ ஓட்டுநா் செண்பகராஜ் (25) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவா் பையில் வைத்திருந்த கால் கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
மற்றொருவா் கைது: கோவில்பட்டியில் வீரவாஞ்சி நகா் பகுதியில் திங்கள்கிழமை ரோந்து சென்றபோது, சந்தேக நபரைப் பிடித்து விசாரித்தனா். அவா் வீரவாஞ்சிநகா் 1ஆவது தெருவைச் சோ்ந்த பண்டாரம் மகன் கல்லத்தியான்(34) என்பதும், 200 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.