கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டு இருந்த கோவை குற்றாலம் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மே 23 ஆம் தேதி வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டு இருந்த கோவை குற்றாலம், இன்று முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்பட்டு உள்ளது.கடந்த மே மாதம் பெய்த பருவமழை, மற்றும் கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழையாக பெய்து வந்தது.
இதன் காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாவிற்கு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காகத் தற்காலிகமாக வனத்துறையினர் மூடுவதாக அறிவித்து மூடப்பட்டு இருந்தது. மழைப்பொழிவு குறைந்ததாலும், அருவியில் நீர்வரத்து குறைந்ததாலும், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாகக் குளிக்க அனுமதி வழங்கப்படுவதாகவும் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டனர்.
இந்நிலையில் இன்று முதல் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாவிற்குச் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். வனத்துறையின் தனி வாகனங்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர். இதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். கோவை குற்றாலம், மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளதால் வெளியூர் மற்றும் வெளி மாவட்டம், மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டுப் பயணிகளும் வந்து கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாவை மகிழ்ச்சியுடன் அனுபவித்துச் செல்கின்றனர்.