கோவையில் கவிழ்ந்த எரிவாயு டேங்கர் லாரி மீட்பு: மக்கள் நிம்மதி!
கோவையில் எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அந்த லாரியை மீட்புக் குழுவினர் அப்புறப்படுத்தியுள்ளனர்.
கேரளம் மாநிலம், கொச்சியில் இருந்து எல்பிஜி எரிவாயு ஏற்றி வந்த பாரத் டேங்கர் லாரி வெள்ளிக்கிழமை அதிகாலை கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் மீது ஏறி காந்திபுரம் நோக்கி திரும்பும் போது சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த லாரியில் இருந்து டேங்கர் மட்டும் கழன்று விழுந்ததில் சேதம் ஏற்பட்டு எரிவாயு கசிவு ஏற்பட்டது. அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நடந்த நிலையில், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் அப்பகுதி கொண்டுவரப்பட்டது.
இதையும் படிக்க : அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
அந்த டேங்கரில் 18 மெட்ரிக் டன் எரிவாயு இருந்ததால் அப்பகுதி மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது. மேலும், விபத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள 35 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், 8 மணிநேர போராட்டத்துக்கு பிறகு டேங்கர் லாரி மீட்கப்பட்டு, எரிவாயு கசிவை தீயணைப்புத் துறையினர் நிறுத்தியுள்ளனர். இந்த லாரியை மீட்பதற்காக சாலையின் நடுவே இருந்த 4 அடி திருவள்ளுவர் சிலை மாநகராட்சி அதிகாரிகளால் அகற்றப்பட்டது.
திருச்சியில் இருந்து வரும் மீட்பு லாரி மூலம் டேங்கர் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான லாரியை இருகூர் பகுதியில் உள்ள கேஸ் நிறுவன வளாகத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.