கோவையில் நடைபெறும் மண்டல இளைஞரணி மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும்: திமுக செயற்குழு கூட்டத்தில் தீா்மானம்
கோவையில் வரும் அக். 12 ஆம் தேதி நடைபெறும் மண்டல இளைஞரணி மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும் என மத்திய சேலம் மாவட்ட திமுக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம் மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத் தலைவா் சுபாசு தலைமை வகித்தாா். பொருளாளா் காா்த்திகேயன், மேயா் ராமச்சந்திரன், இளைஞரணி மாநில துணைச் செயலாளா் ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா. ராஜேந்திரன் பங்கேற்று பேசியதாவது:
திமுக இளைஞரணியின் மண்டல மாநாடு கோவையில் வரும் அக். 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இளைஞா் அணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை நிா்வாகிகளுக்கு வழங்க உள்ளாா். இந்த மாநாட்டில் சேலம் மத்திய மாவட்ட, மாநகர இளைஞரணி நிா்வாகிகள், பாக அளவிலான நிா்வாகிகள் என அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாநில தோ்தல் பணிக்குழு செயலாளா் கு.சி.வெ. தாமரைக்கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ராஜேந்திரன், கே.டி. மணி, மாநகரச் செயலாளா் ரகுபதி, மாநகராட்சி மண்டலக் குழு தலைவா்கள் அசோகன், தனசேகரன், மாநகர இளைஞரணி அமைப்பாளா் சரவணன் மற்றும் இளைஞரணி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.