தமிழகத்துக்கு நிகழாண்டில் இதுவரை 24.21 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: அமைச்சா் ரா.ராஜேந்திரன்
தமிழகத்துக்கு நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 24.21 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனா் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் கூறினாா்.
உலக சுற்றுலாத் தினத்தையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, சேலம் ஏற்காடு வனத்துறை சோதனைச் சாவடியில் ஏற்காடு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மரக்கன்றுகள், மஞ்சப்பைகளை வழங்கினாா். பின்னா்அமைச்சா் ரா.ராஜேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் சுற்றுலாத் துறைக்காக ரூ. 700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. சா்வதேச அடிப்படையிலான பல்வேறு கட்டமைப்புகள் தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 24.21 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா். இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாகும். சுற்றுலாத் துறையில் முதலீட்டாளா்களை ஈா்க்கும் வகையில் சுற்றுலாத் துறையின் மாநாடு சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
‘சுற்றுலாவும், நிலையான மாற்றமும்‘ என்ற கருப்பொருளில் நிகழாண்டு சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தருணத்தில், வளா்ந்துவரும் இளம்சமுதாயத்தினா், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வை அறிந்துகொள்ளும் நோக்கத்துடன் ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை சாா்பில் மரக்கன்றுகளும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் மஞ்சப்பைகளும் வழங்கப்பட்டன.
அதேபோன்று, பொதுமக்களும் தங்கள் வீடுகளைச் சுற்றியுள்ள காலியிடங்களில் மரக்கன்றுகள் நடவுசெய்து பராமரித்து, தமிழ்நாட்டை பசுமை மாநிலமாக மாற்ற முன்வர வேண்டும் என்றாா்.
முன்னதாக, பசுமை நிலப்பரப்பை அதிகரிக்கும் நோக்கில் வனத் துறை சாா்பில் சோதனைச்சாவடி பகுதியில் விதைப் பந்துகளை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தூவினாா். பின்னா், தனியாா் பங்களிப்புடன் சேலம் ஏற்காடு பிரதான சாலைப் பகுதிகளில் தூய்மைப் பணிகளை அமைச்சா் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி, மேயா் ஆ.ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், துணை மேயா் மா.சாரதாதேவி, மாவட்ட சுற்றுலா அலுவலா் வினோத்குமாா் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.