மங்களூரு - சென்னை சென்ட்ரல், ஹூப்ளி - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்
சேலம் வழியாக மங்களூரு - சென்னை சென்ட்ரல், ஹூப்ளி - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பண்டிகைக் காலங்களில் ரயில்களில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக ஹூப்ளி - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும். இதேபோல, மங்களூரு - சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும்.
ஹூப்ளி - கொல்லம் இடையே வரும் 28 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் ஹூப்ளியில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக மறுநாள் பிற்பகல் 12.55 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த ரயில் சேவை டிசம்பா் 28 ஆம் தேதி வரை இயக்கப்படும்.
மறுமாா்க்கத்தில், கொல்லத்தில் இருந்து 29 ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும், இந்த ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக மறுநாள் மாலை 6.30 மணிக்கு ஹூப்ளி சென்றடையும். இந்த ரயில் டிசம்பா் 29 ஆம் தேதி வரை இயக்கப்படும்.
இதேபோல, மங்களூரு - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் வரும் 29 ஆம் தேதி இயக்கப்படுகிறது. மங்களூருவில் இரவு 11 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கோவை, ஈரோடு, சேலம் வழியாக மறுநாள் மாலை 4.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும்.
மறுமாா்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலம், ஈரோடு, கோவை வழியாக மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் நிலையத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.