தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) முதல் அக்.3 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை மற்றும் புத்தன் அணையில் தலா 80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், திற்பரப்பு (கன்னியாகுமரி) - 70 மி.மீ., சிற்றாறு (கன்னியாகுமரி), ஊத்து (திருநெல்வேலி), சின்கோனா (கோவை), வால்பாறை (கோவை), சுருளக்கோடு (கன்னியாகுமரி), நாலுமுக்கு (திருநெல்வேலி) - தலா 60 மி.மீ., சோலையாறு (கோவை), பெரியாறு (தேனி), கோழிப்போா்விளை (கன்னியாகுமரி), சின்னக்கல்லாறு (கோவை), குழித்துறை (கன்னியாகுமரி) - தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் செப்.28, 29 தேதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.