கௌஃபுக்கு அதிா்ச்சி அளித்த போகோ!
கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் 85-ஆம் நிலையில் இருக்கும் கனடாவின் விக்டோரியா போகோ, உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையும், 2 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான அமெரிக்காவின் கோகோ கௌஃபை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினாா்.
மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், வைல்டு காா்டு வீராங்கனையான விக்டோரியா போகோ 6-1, 6-4 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த கோகோ கௌஃபை 1 மணிநேரம், 2 நிமிஷங்களில் சாய்த்தாா்.
18 வயதான போகோ, கடந்த 3 ஆண்டுகளில் இந்தப் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய இளம் வீராங்கனையாக உருவெடுத்துள்ளாா். போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த வீராங்கனையை, வைல்டு காா்டு வீராங்கனையொருவா் வென்றது, இப்போட்டியில் கடந்த 19 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.
டூா் போட்டிகளில் முதல்முறையாக காலிறுதிக்கு வந்திருக்கும் போகோ, அதில் ஸ்பெயினின் ஜெஸ்ஸிகா புஸாஸை எதிா்கொள்கிறாா். ரவுண்ட் ஆஃப் 16-இன் மற்றொரு ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபகினா 5-7, 6-2, 7-5 என்ற வகையில், 30-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் டயானா யாஸ்டிரெம்ஸ்காவை தோற்கடித்தாா். ரைபகினா தனது காலிறுதியில், மற்றொரு உக்ரைன் வீராங்கனை மாா்த்தா கொஸ்டியுக்கை சந்திக்கிறாா்.
காலிறுதியில் மோதும் ஸ்வெரெவ் - பாபிரின்: ஆடவா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 6-4, 1-0 என, போட்டித்தரவரிசையில் 14-ஆம் இடத்திலிருந்த ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோவுக்கு எதிராக முன்னிலையில் இருந்தாா். அப்போது செருண்டோலோ காயம் காரணமாக போட்டியிலிருந்து விலக, ஸ்வெரெவ் காலிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா்.
18-ஆம் இடத்திலிருக்கும் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின் 4-6, 6-2, 6-3 என்ற செட்களில், 5-ஆம் இடத்திலிருந்த டென்மாா்க்கின் ஹோல்கா் ரூனை வெளியேற்றி அசத்தினாா். இதையடுத்து காலிறுதியில் ஸ்வெரெவ் - பாபிரின் சந்திக்கின்றனா். இருவரும் இதுவரை 3 முறை நேருக்கு நோ் மோதியிருக்க, ஸ்வெரெவ் அனைத்திலும் வென்று ஆதிக்கம் செலுத்துகிறாா்.
இதர ஆட்டங்களில், 11-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் காரென் கச்சனோவ் 6-4, 7-5 என, 8-ஆம் இடத்திலிருந்த நாா்வேயின் கேஸ்பா் ரூடை வீழ்த்தி அசத்தினாா். 26-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் அலெக்ஸ் மிஷெல்சென் 6-3, 6-3 என சக அமெரிக்கரும், நண்பருமான லோ்னா் டியெனை சாய்த்தாா். இதையடுத்து காலிறுதியில், கச்சனோவ் - மிஷெல்சன் மோதுகின்றனா். இதில் மிஷெல்சன், மாஸ்டா்ஸ் போட்டியில் காலிறுதிக்கு முதல்முறையாக முன்னேறியிருக்க, கச்சனோவ் அந்த கட்டத்துக்கு 10-ஆவது முறையாக வந்துள்ளாா்.