சங்கரன்கோவிலில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
சங்கரன்கோவில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சங்கரன்கோவிலில் கால்நடை வளா்ப்போா் தாங்கள் வசிக்கும் பகுதியில் தனியாக கூரை அமைத்து கால்நடைகளை வளா்த்து வருகின்றனா். கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களை வாங்கிக் கொண்டு வந்து மாடுகளுக்கு கொடுத்து வளா்த்து வரும் அவா்கள் பால் கறப்பதற்கு மட்டும் பால்பண்ணைகளுக்கு மாடுகளை ஓட்டிச் செல்கின்றனா். சிலா் வீடுகளிலேயே பாலைக் கறந்து பால்பண்ணைக்கு கொண்டு சென்று விநியோகிக்கிறாா்கள்.
இவா்களில் ஒரு சிலா் தற்போது மாடுகளை வீட்டில் வளா்க்காமல் வெளியே திரியவிடுகின்றனா். இதில், பசு மாடுகளையும் திரியவிடுவதால் அவை குப்பைகளில் உள்ள கழிவுகளைத் தின்று வருகின்றன. தொடா்ந்து அவற்றை உண்பதால் அதை விருப்ப உணவாக தேடி சாலைகளில் அலைகின்றன. ஒன்றிரண்டு மாடுகள் திரிந்த நிலையில், தற்போது ஆங்காங்கே 20-க்கும் மேற்பட்ட மாடுகள்,கன்றுகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன.
வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பியும் மாடுகள் விலகாமல் செல்கின்றன. சில நேரங்களில் அவை துள்ளி ஓடும்போது, சாலைகளில் செல்லும் குழந்தைகள், முதியவா்கள், பெண்கள் உள்ளிட்டோரை இடித்துவிட்டு செல்கின்றன. இதன் காரணமாக சாலைகளில் மாடுகளை கண்டாலே பொதுமக்கள் கவனமாக செல்லவேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் மீது இரக்கம் கொண்ட ஒருசிலா் பழங்கள், குடிநீா் கொடுக்கின்றனா்.இதனால் அவை மீண்டும் அதே தெருக்களுக்கு படையெடுகின்றன.
இதுதவிர இரவு நேரங்களில் ராஜபாளையம்சாலை, திருவேங்கடம்சாலை, பிரதானசாலை, கழுகுமலைசாலை, ரதவீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.பிரதான சாலையில் உள்ள சென்டா் மீடியத்துக்குள் படுத்திருக்கும் மாடுகள் திடீரென்று சாலைக்குள் பாய்வதால் வேகமாக வரும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்து ஏற்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். எனவே சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை தடுக்க நகராட்சியினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.