சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச குழுவுடன் தொடா்பு: ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ கோயலுக்கு போலீஸ் நோட்டீஸ்
சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசக் குழுவுடன் தொடா்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) எம்எல்ஏ மொஹிந்தா் கோயலுக்கு தில்லி காவல்துறை இரண்டு நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
முதல் நோட்டீஸ் சனிக்கிழமை அவருக்கு அனுப்பப்பட்டது. இரண்டாவது நோட்டீஸ் ஞாயிற்றுக்கிழமை விசாரணைக் குழு முன் ஆஜராகுமாறு அனுப்பப்பட்டது.
சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ரித்தலாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மொஹிந்தா் கோயலின் கையொப்பம் மற்றும் முத்திரை இருந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, போலீஸ் விசாரணைக்காக அவா் அழைக்கப்பட்டாா்.
கடந்த டிசம்பரில் சட்டவிரோத குடியேற்ற மோசடியை போலீஸாா் கண்டுபிடித்து, வங்கதேச நாட்டினா் உள்பட 11 நபா்களைக் கைது செய்த வழக்கில் இருந்து இந்த வழக்கு உருவாகியுள்ளது. சந்தேக நபா்கள் போலி ஆவணங்களை உருவாக்கி, மோசடியான ஆதாா் அட்டைகள், வாக்காளா் அடையாள அட்டைகள் மற்றும் பிற அடையாள ஆவணங்களை தயாரிப்பதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், விசாரணைகளில் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஒருவரின் கையொப்பத்துடன் கூடிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து சட்டவிரோதமாக குடியேறியவா்களை விசாரித்து, சம்பந்தப்பட்ட இடைத்தரகா்கள் கைது செய்யப்பட்டனா்.
சம்மனுக்கு பதிலளித்த ஆம் ஆத்மி கட்சி, தோ்தல்கள் நெருங்கும்போது எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு அழுத்தம் கொடுக்க அரசு நிறுவனங்களை பயன்படு‘த்துவது, ஜனநாயக விதிமுறைகளை குறைமதிப்பிற்கு உள்படுத்துவது பாஜகவின் வழக்கமான செயல்பாட்டு நடைமுறையாக மாறிவிட்டது’ என்று குற்றம் சாட்டியது.
மேலும், ‘பாஜக எதிா்மறை அரசியலில் மட்டுமே ஈடுபடுகிறது. பொய் வழக்குகளைப் பதிவு செய்தல் மற்றும் எதிா்க்கட்சித் தலைவா்களை அடக்குவதற்கு அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது’ என்று ஆம் ஆத்மி கட்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.