கிராமப்புற வேலைவாய்ப்புக்காக மாநிலங்களுக்கு ரூ. 44,000 கோடி விடுவிப்பு: மத்திய அ...
சதுரகிரி ஆடி அமாவாசை விழா: பிரதோஷத்திற்குக் குவிந்த பக்தர்கள்; வனத்துறையின் கட்டுப்பாடுகள் என்னென்ன?
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்.
இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திருவிழாவிற்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்துவார்கள்.

இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான ஆடி அமாவாசை திருவிழா இன்று முதல் வரும் ஜூலை 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆடி அமாவாசை திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இன்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோயில் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்களுக்குக் காலை 6:00 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் இரவில் கோயிலில் தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு இன்று மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற உள்ளது.
ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் வாகன நிறுத்தங்களும் பக்தர்கள் வசதிக்காகச் செய்யப்பட்டுள்ளன. தாணிப்பாறை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பிலிருந்த அரசு நிலம் 8 ஏக்கர் மீட்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பக்தர்களின் வசதிக்காக வாகன நிறுத்தும் இடம் மற்றும் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதையில் 10 இடங்களில் தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தன்னார்வலர்கள் மூலம் ஆறு இடங்களில் பக்தர்களுக்குக் குடிநீர் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலைப்பாதையில் மருத்துவக் குழு தயார் நிலையில் உள்ளனர். மலைப்பாதையில் உள்ள நீரோடு பகுதியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட போலீஸார், பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர், வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர், நக்சல் தடுப்புப் பிரிவினர் என மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.