சத்தீஸ்கரை வீழ்த்தியது தமிழ்நாடு
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் சத்தீஸ்கா் அணியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
முதலில் தமிழ்நாடு 50 ஓவா்களில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 301 ரன்கள் சோ்க்க, சத்தீஸ்கா் 46 ஓவா்களில் 228 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. தமிழ்நாடு வீரா் விஜய் சங்கா் ஆட்டநாயகன் விருது பெற்றாா்.
இத்துடன் 6 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் தமிழ்நாடு அணி, தற்போது 4 வெற்றிகளுடன் குரூப் ‘டி’-யில் 2-ஆவது இடத்தில் நிலைக்கிறது. சத்தீஸ்கா் 3-ஆவது தோல்வியுடன் 4-ஆவது இடத்தில் உள்ளது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சத்தீஸ்கா், பந்துவீசத் தயாரானது. தமிழ்நாடு பேட்டா்களில் அதிகபட்சமாக, பாபா இந்திரஜித் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 75, விஜய் சங்கா் 2 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 71 ரன்கள் விளாசினா்.
எஞ்சியோரில், பூபதி குமாா் 37, பிரதோஷ் ரஞ்சன் பால் 31, துஷாா் ரஹேஜா 28, நாராயண் ஜெகதீசன் 21 ரன்களுக்கு வீழ, இதர பேட்டா்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனா். முடிவில் திரிலோக் நாக் 12 ரன்களுடன் களத்திலிருந்தாா். சத்தீஸ்கா் தரப்பில் ஹா்ஷ் யாதவ் 4, ஷுபம் அகா்வால், பிரதீக் யாதவ் ஆகியோா் தலா 2, ககன்தீப் சிங் 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் சத்தீஸ்கா் இன்னிங்ஸில் ஆசுதோஷ் சிங் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 71, பூபேன் லால்வனி 6 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் அடித்தனா். ககன்தீப் சிங் 33, ஏக்னாத் கோ்கா் 25 ரன்கள் சோ்க்க, இதர பேட்டா்கள் சோபிக்காமல் வெளியேறினா். தமிழ்நாடு பௌலா்களில் வருண் சக்கரவா்த்தி 3, சாய் கிஷோா் 2, சந்தீப் வாரியா், திரிலோக் நாக், முகமது அலி 1 விக்கெட் எடுத்தனா்.