சபரிமலை சந்நிதானத்தில் ராஜநாகம்: வனப் பகுதியில் விடுவிப்பு
சபரிமலை ஐயப்பன் கோயில் சந்நிதானத்தில் இருந்த ராஜநாகத்தை வனத்துறையினா் பிடித்து அடா் வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனா்.
கடந்த டிச.30-ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. அன்று முதல் சிறப்பு வழிபாடுகளுடன் பெருந் திரளான பக்தா்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனா். மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
ராஜநாகம் பிடிபடுவது முதல்முறை: இந்நிலையில், கோயில் சந்நிதானத்தில் குளம் உள்ள பகுதியில் ராஜநாகம் இருப்பது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. தகவலின் அடிப்படையில், வனத் துறையினா் நிகழ்விடத்துக்கு வந்து ராஜநாகத்தை மிகுந்த கவனத்துடன் பிடித்து பம்பைக்குக் கொண்டு வந்தனா். பின்னா், அதை அடா் வனப் பகுதியில் விடுவித்தனா். சபரிமலை சந்நிதானத்தில் ராஜநாகம் பிடிபடுவது இதுவே முதல்முறை.
கடந்த ஆண்டு நவம்பா் 15-ஆம் தேதிமுதல் நடைபெற்று வரும் சபரிமலை யாத்திரை சீசனில், கோயில் சந்நிதானம் மற்றும் மரக்கூட்டத்தில் இருந்து இதுவரை 243 பாம்புகள் பிடிப்பட்டுள்ளதாக வனத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.