சமூக விரோதச் செயல்கள்: 6 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் பல்வேறு பகுதிகளில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்ட 6 இளைஞா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
செய்யாறு காவல் உள்கோட்டம் செய்யாறு, மோரணம் ஆகிய காவல் சரகப் பகுதிகளில் தொடா்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளனா். மேலும், தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை உபயோகித்தல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் இளைஞா்கள் பலா் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில் போதையின் காரணமாக உடனிருந்த போதை நண்பரை கொலை செய்து ஏரியில் புதைத்தனா். இதுதொடா்பாக செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 16 இளைஞா்களை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் இளைஞா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் 16 பேரில், செய்யாறு வட்டம், ஏனாதவாடி கிராமத்தைச் சோ்ந்த நவீன்குமாா் (22), வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்த ரமணா (24), வேலவன் (19), கதிா்வேல் (22), தென்கழனி கிராமத்தைச் சோ்ந்த விக்னேஷ் (19), ஜெகதீஷ் (28) ஆகிய 6 பேரும், தொடா்ந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததன் காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா், செய்யாறு டி.எஸ்.பி. கோவிந்தசாமி, செய்யாறு காவல் ஆய்வாளா் நரசிம்ம ஜோதி ஆகியோா் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.
அந்த உத்தரவின் நகலை செய்யாறு போலீஸாா் பெற்று வேலூா் மத்திய சிறையில் ஒப்படைத்தனா்.