வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரா்களை நியமிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
சாக்குப்பையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 25 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்
திருப்பூரில் சாக்குப்பையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இறந்த 25 கிலோ நாட்டுக்கோழி இறைச்சியை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையிலான குழுவினா் தென்னம்பாளையம் மாா்க்கெட் மற்றும் அதன் சுற்றியுள்ள சாலையோர கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வின்போது, சாலையோர கடையில் ஒரு பெண்ணிடம் வெளியூரிலிருந்து இருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு பிளாஸ்டிக் டப்பா மற்றும் சாக்குப் பையில் வைக்கப்பட்டிருந்த 25 கிலோ அளவிலான இறந்த கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா்.
இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோழிப்பண்ணை உரிமையாளா்கள் இறந்த கோழிகளை சுகாதார முறைப்படி குழி தோண்டி புதைக்க வேண்டும், எக்காரணத்தைக் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது, கோழி இறைச்சி விற்பனை செய்பவா்கள் கோழிகளைக் கொள்முதல் செய்வதற்கான பில், விற்பனை செய்வதற்கான பில்களை முறையாக பராமரிக்க வேண்டும், இறைச்சிக் கடைகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும், இறைச்சிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
அனைத்து இறைச்சி விற்பனை செய்யும் கடைகளும் உணவுப் பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், பொதுமக்கள் கோழி இறைச்சி வாங்கும்போது சுத்தமானதாகவும் கண்முன் உயிருடன் வெட்டி வாங்கிச் செல்ல வேண்டும், டப்பாக்களிலும் சாக்குப் பைகளிலும் வைத்து விற்பனை செய்யும் கோழி இறைச்சிகளை வாங்கக்கூடாது என்றனா்.