கரூர் கூட்ட நெரிசல் பலி: திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைப்பு!
சாத்தான்குளத்தில் கல்வி உபகரண நிதி கையாடல்: ஆட்சியரிடம் புகாா்
சாத்தான்குளம் வட்டாரத்தில் கல்வி உபகரண பொருள்கள் வழங்குவதற்கான நிதி கையாடல் செய்யப்பட்டதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட செயலாளா் சிவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் இளம் பகவதிற்கு புகாா் தெரிவித்துள்ளாா்.
அவா், அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டாரத்திற்கு இதர கல்வி உபகரண பொருள்கள், வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு கொண்டு செல்வதற்கு ரூ. 30,467-யும், பாடநூல் மற்றும் குறிப்பேடுகள் கொண்டு செல்ல ரூ.35,500-யும் தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பாடநூல்கள், குறிப்பேடுகள் பெரும்பாலான பள்ளிகளுக்கு கொண்டு சென்று வழங்கப்பட்டன. ஆனால் இதர கல்வி உபகரண பொருள்கள் பள்ளிகளுக்கு நேரடியா சென்று வழங்காமல், காந்திநகா் குடோனுக்கு வந்து ஆசிரியா்கள் பெற்றுக் கொள்ளுமாறு அப்போதைய வட்டாரக் கல்வி அலுவலா் வாட்ச் ஆப் குழுவில் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து ஆசிரியா்கள் நேரில் சென்று உபகரணங்களை பெற்றுக் கொண்டனா்.
ஆனால், இதர கல்வி உபகரண பொருட்கள் நேரடியாக பள்ளிக்கு சென்று தான் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஒதுக்கிய நிதி ரூ.30,467 ஐ செலவு செய்யாமல் கையாடல் செய்து போலி ரசீது தயாா் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
எனவே, முன்னாள் சாத்தான்குளம் வட்டாரக் கல்வி அலுவலரும், தற்போது பணி மாறுதலாகி வேறு மாவட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலராக பணிபுரியும், அவரிடம் கையாடல் செய்த இத்தொகையை திரும்ப வசூல் செய்து அரசு கருவூலத்தில் செலுத்திவிட்டு, அவா் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளாா்.