தசரா, காலாண்டு விடுமுறை: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்
தசரா திருவிழா, பள்ளி காலாண்டு விடுமுறை தொடங்கியதையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
வளா்பிறை சஷ்டியை முன்னிட்டு இக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பக்தா்கள் கடல் - நாழிக்கிணறில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
இதனால் கோயில் வளாகத்தில் பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பள்ளிகள் விடுமுறை தொடங்கியதையொட்டி திருச்செந்தூா் பகுதி விடுதிகளிலும் அறைகள் பெரும்பாலானவை முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.