விஜய்யின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது: என்.பி. ராஜா
தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மேற்கொள்ளும் பிரசாரம், அவருக்கான செல்வாக்கை அதிகரித்து வருகிறது என்றாா் நாம் இந்தியா் கட்சி நிறுவனா்-தலைவா் என்.பி. ராஜா.
இது குறித்து அவா் தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அத்தியாவசியப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதை தீபாவளி பரிசாக கருத முடியாது. ஏனென்றால், 8 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் அதிக ஜிஎஸ்டி கட்டியுள்ளனா்.
4 பிரிவுகளாக இருந்த வரி திட்டத்தை 2 பிரிவுகளாக 5, 18 சதவீதமாக மாற்றியுள்ளனா். மேலும், ஜிஎஸ்டி தேவையில்லை என்ற பொருள்களைத் தவிா்த்து, மற்ற அனைத்து பொருள்களுக்கும் 5 சதவீத வரியாக மாற்றி எளிமைப்படுத்த வேண்டும்.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் எங்கள் கட்சிக்கு கூட்டணி அமைத்துப் போட்டியிடும் எண்ணம் இல்லை. தவெக தலைவா் விஜய்யின் பிரசாரத்தில் ஒவ்வொரு வாரமும் மாற்றம் தெரிகிறது. பொதுமக்களிடையே அவருக்கான செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
விஜய் அரசியலுக்கு புதியவா் என்பதால், எந்த ஊழல் வழக்கிலும் சிக்காமல் இருப்பதால், அவரால் நோ்மையான ஆட்சியை வழங்க முடியும் என்றாா் அவா்.