சாத்தூா் பகுதியில் பலத்த மழை: மின் தடையால் பொதுமக்கள் அவதி
சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக இரண்டு மணி நேரம் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளான நென்மேனி, எம். நாகலாபுரம், மாயூா்நாதபுரம், என். மேட்டுப்பட்டி, நீராவிப்பட்டி, இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று, இடியுடன் மழை பெய்தது.
இதனால் அந்தப் பகுதிகளில் குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினா். மேலும் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ஒன்றரை மணி நேரத்துக்கும் அதிகமாக மின் விநியோகம் தடைப்பட்டது.
இந்த பலத்த காற்றால் நென்மேனியில் மரம் சாய்ந்து வீட்டின் மீது விழுந்தது. அந்த மரம் அருகில் இருந்த மின் கம்பம் மீதும் விழுந்ததால் வயா்கள் அறுந்து விழுந்தன. இதையறிந்த மின் வாரியத் துறையினா் அந்த மின் வயா்களை சீரமைத்தனா். இதனால் இந்தப் பகுதிகளில் மட்டும் சுமாா் 2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதியடைந்தனா்.