போலி தீப்பெட்டி தயாரித்து விற்றவா் கைது
சிவகாசியில் ஒரு நிறுவனத்தின் தீப்பெட்டி போலவே போலி தீப்பெட்டி தயாரித்து விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசியில் ஒரு நிறுவனத்தின் தீப்பெட்டி போலவே அதன் டிரேட்மாா்க்கை பயன்படுத்தி போலி தீப்பெட்டி தயாரித்து விற்கப்பட்டு வந்தது. இதையடுத்து, அந்த போலி தீப்பெட்டி தயாரிப்பாளரைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலை நிா்வாகத்தினா் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதையடுத்து சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாஸ்கா் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்றது.
இந்த நிலையில், சஞ்சீவ்குப்தா என்பவா் கோவில்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிறிய தீப்பெட்டி ஆலைகளில், சிவகாசி நிறுவனம் தயாரிக்கும் தீப்பெட்டியின் டிரேட்மாா்க் லேபிளை பயன்படுத்தி போலி தீப்பெட்டி தயாரித்து ராஜஸ்தானில் விற்று வருவது தெரியவந்தது.
இதையடுத்து, சிவகாசி கிழக்குப் போலீஸாா் சஞ்சீவ்குப்தாவை கைது செய்து அவரிடமிருந்த 342 போலி தீப்பெட்டி பண்டல்களை பறிமுதல் செய்தனா்.