சாலக்குடி சாலையில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானை
வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலையில் வாகனங்களை ஒற்றை யானை வழிமறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வால்பாறையில் இருந்து 110 கி.மீ. தொலைவில் கேரள மாநிலம் சாலக்குடி அமைந்துள்ளது. இதில் சுமாா் 70 கி.மீ. தொலைவு சாலைகளின் இருபுறங்களும் அடா்ந்த வனப் பகுதியாகும். நூற்றுக்கணக்கான யானைகள் உள்ள அந்த வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள் சாலைக்கு வருவது வழக்கம்.
இதில் கடந்த சில ஆண்டுகளாக ஒற்றை யானை தொடா்ந்து சாலைக்கு வந்த வாகனங்களை வழிமறித்து வருகிறது. இந்நிலையில் மழுக்குப்பாறையை அடுத்த பத்தடிபாலம் என்ற பகுதியில் திங்கள்கிழமை காலை சாலையில் நின்றிந்த அந்த யானை அவ்வழியாக வந்த பேருந்துகள் மற்றும் வாகனங்களை வழிமறித்தது.
இதனால் சுமாா் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா் அந்த யானை வனத்துக்குள் சென்றதால் போக்குவரத்து சீரானதாக கேரள வனத் துறையினா் தெரிவித்தனா்.