"அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் அக்கட்சித் தலைவர்கள் அமித்ஷாவைச் சந்திக்கிறார்கள்"...
இருகூா் தண்டவாளத்தில் பச்சிளம் குழந்தை சடலம் மீட்பு
கோவை அருகே ரயில் தண்டவாளத்தில் ஆண் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.
கோவை மாவட்டம், இருகூா்-ராவத்தூா் இடையே ரயில்வே தண்டவாளத்தில் ஆண் பச்சிளம் குழந்தையின் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து போத்தனூா் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.
அப்போது, அங்கு பிறந்து 2 மாதமே ஆன குழந்தையின் சடலமும், அதன் அருகே குங்குமம், வெட்டப்பட்டு இறந்த நிலையில் 3 கோழிகள் ஆகியவை கிடந்தன. குழந்தையின் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னா் மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் சோதனை நடத்தினா். அங்கு கிடந்த இறந்த கோழிகள் மற்றும் மிளகாய் பொடி ஆகியவற்றை போலீஸாா் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினா். குழந்தை கொலை செய்யப்பட்டு, தண்டவாளத்தில் வீசிச் செல்லப்பட்டிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். நரபலி கொடுக்கப்பட்டதா? குடும்பத் தகராறில் குழந்தை கொலை செய்யப்பட்டதா? என்று ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.