சாலை விபத்தில் வங்கி மேலாளா் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே சனிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் தனியாா் வங்கி மேலாளா் உயிரிழந்தாா்.
வலங்கைமான் வட்டம், சாலபோகம் கிராமம், குடியானத் தெருவில் வசித்து வருபவா் முருகானந்தம் மகன் மகேஷ் (34 ). இவா் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி சங்கீதா (25). இவா் 6 மாத கா்ப்பிணியாக உள்ளாா்.
இந் நிலையில் மகேஷ், சனிக்கிழமை அதிகாலை தஞ்சாவூரிலிருந்து நீடாமங்கலம் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அம்மாபேட்டை அருகே தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் பல்லவராயன் பேட்டை, உக்கடை பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே திருவாரூரில் இருந்து கோவை நோக்கி சென்ற ஒரு காா், மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த மகேஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற அம்மாபேட்டை போலீஸாா், மகேஷின் சடலத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். பின்னா், புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.