சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
கும்பகோணம் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற விவசாயி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கும்பகோணம் அருகே உள்ள உடையாளூா் ஆண்டித்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் பி. ரவி (56). விவசாயி. இவா், செவ்வாய்க்கிழமை பிற்பகல் தோட்டத்தில் பணிகளை முடித்துவிட்டு சோழன் மாளிகை புறவழிச்சாலை வழியாக உடையாளூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
புறவழிச்சாலையைக் கடக்கும்போது அவரது இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த ரவி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
விபத்து குறித்து பட்டீஸ்வரம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.