சாலைகளை விரிவாக்கியதற்காகவா சுங்கச்சாவடிகள்? மக்கள் வேதனை
சென்னை: வேலூர் - திருவண்ணாமலை - விழுப்புரம் இடையேயான 110 கி.மீ. தொலைவுள்ள தேசிய நெடுஞ்சாலையின் பக்கவாட்டில் 1.5 மீட்டர் அளவுக்கு விரிவுபடுத்திவிட்டு, 3 சுங்கச்சாவடிகளை வைத்து சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுங்சாலைகள் துறை பல கோடி சுங்கக் கட்டணம் வசூலித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு விரிவுபடுத்தப்பட்ட வேலூர் - திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே கடந்த 20 மாதங்களில் அதாவது 2023 ஏப்ரல் முதல் 2024 நவம்பர் வரை மூன்று சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா ரூ.36 கோடி. இந்த மூன்று சுங்கச்சாவடிகளில் மாதந்தோறும் சராசரியாக வசூலிக்கப்படும் தொகை ரூ.1.82 கோடி.
இந்த திட்டத்துக்கு மத்திய அரசு செலவிட்ட மொத்த தொகையே ரூ.273 கோடிதான் என்று எக்ஸ்பிரஸ் குழுமம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலாகக் கிடைத்துள்ளது.
ஏற்கனவே இருந்த 5 மீட்டர் அகல சாலை தற்போது 8.5 மீட்டர் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு 2023 ஜனவரி முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஒரு தேசிய நெடுஞ்சாலைக்கான எந்தத் தகுதிகளும் இந்த வழித்தடத்தில் இல்லை என்றும், பல இடங்களில் சாலை ஆக்ரமிப்புகள், மேம்பால வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டுகளோடு, சுங்கக் கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள் வாகன ஓட்டிகள். அது மட்டுமல்ல, மோசமான சாலை அமைப்பினால் இங்கு ஒரு ஆண்டில் 244 விபத்துகள் நேரிட்டிருப்பதாகவும் 18 பேர் மரணமடைந்திருப்பதாகவும் 54 பேர் காயமடைந்திருப்பதாகவும் தரவுகள் கூறுகின்றன.
சாலையின் தரத்தை மேம்படுத்தாமல், சுங்கச் சாவடிகைள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், மாநில அரசின் நிதியில் உருவாக்கப்படும் சாலைகளில் சுங்கச்சாவடிகள் இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டும் வாகன ஓட்டிகள், மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் சாலை அமைத்துவிட்டு, சாலை அமைத்ததற்கும் மக்களிடமிருந்தே கட்டணமும் வசூலிக்கும் மத்திய அரசு, அதற்கேற்ற வசதிகளையாவது ஏற்படுத்த வேண்டாமா என்பதே வாகன ஓட்டிகளின் கேள்வியாக மாறியிருக்கிறது.