சாலையோர வியாபாரிகளின் மீன்கள் பறிமுதல்: நகராட்சியைக் கண்டித்து சாலை மறியல்!
ராமநாதபுரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சாலையோர வியாபாரிகள் வைத்திருந்த மீன்களை குப்பை அள்ளும் வாகனத்தில் நகராட்சி அதிகாரிகள் எடுத்துச் சென்ால் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் நகராட்சி, சின்னக்கடை பகுதியில் அதிகளவில் இஸ்லாமியா்கள் வசிக்கின்றனா். இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக மீன், காய்கறி, உணவுப் பொருள்களை சாலையோரம் கடைகள் அமைத்து வியாபாரிகள் விற்பனை செய்கின்றனா்.
இந்த நிலையில், அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி வியாபாரிகள் விற்பனைக்காக வைத்திருந்த மீன்கள், காய்கறிகளை குப்பைகளை அள்ளிச் செல்லும் வாகனத்தில் எடுத்துக் கொட்டினா். இதைக் கண்ட வியாபாரிகள் அந்த வாகனத்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் சுவாமிநாதன், போலீஸாா் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட மீன், காய்கறிகள் வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் பிறகு மறியல் திரும்பப் பெறப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவா் ரியஸ்கான் கூறியதாவது:
சின்னக்கடை பகுதியில் பல ஆண்டுகளாக சாலையோர வியாபாரிகள் மீன், காய்கறிகளை விற்பனை செய்கின்றனா். இது வாகனப் போக்குவரத்து குறைவாக உள்ள பகுதியாகும். ஆனால் திட்டமிட்டு நகராட்சி அதிகாரிகள் இதுபோன்று செயல்படுவது கண்டனத்துக்குரியது. இதே நிலை நீடித்தால் நகராட்சியைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.
இந்த மறியலால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.