ரஜினி, சூர்யா ரசிகர்கள் எங்களை ஏற்றுக்கொள்வதில்லை: சல்மான் கான்
சிசிடிவி காட்சிகள்.. 3 மணி நேரத்தில் கைது! வடமாநில கொள்ளையர்கள் குறித்த அதிர்ச்சித் தகவல்!!
சென்னை: அடையாறு காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற சிசிடிவி காட்சிகள் உதவியோடு, செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநிலக் கொள்ளையர்கள் 3 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இதேப்போன்று சென்னையில் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்தபோது, காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதில்தான், அவர்கள் விமான நிலையம் சென்று விமானம் மூலம் தப்பிச் சென்றது தெரிய வந்தது.
அந்த அங்க அடையாளங்களைக் காவல்துறையினர் அடிப்படையாக வைத்துத்தான், இன்று காலை கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், பொங்கலன்று கொள்ளையில் ஈடுபட்டு விமானத்தில் தப்பிச் சென்ற கொள்ளையர்கள் என்பதை உறுதி செய்துகொண்டனர்.
ஒரு மணி நேரத்தில் காவல்துறையினருக்கு அடுத்தடுத்து தங்கச் சங்கிலிப் பறிப்பு தொடர்பாக புகார்கள் வந்த நிலையில், உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு எச்சரிக்கைத் தகவல் பறந்தது.
கொள்ளைச் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது, அவர்கள் வடமாநில கொள்ளையர்கள் என்பதை அறிந்துகொண்ட காவல்துறை, அவர்கள் பயணித்த சாலைகளில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அவர்கள் விமான நிலையம் செல்வதை உறுதி செய்துகொண்டனர்.
விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டதால், டிக்கெட் பரிசோதனை பணிகள் முடிந்து விமானத்தில் ஏற தயாராக இருந்த கொள்ளையர்களை காவல்துறையினர் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.
கடந்த ஜனவரி மாதம் பதிவான சிசிடிவி காட்சிகளைக் கொண்டுதான் அவர்கள் விமானம் மூலம் தப்பிச் செல்வது கண்டறியப்பட்டது. இந்த அடிப்படையில்தான் தற்போது அவர்கள் சிக்கியிருக்கிறார்கள். இந்த முறை சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்று அங்கிருந்து உத்தரப்பிரதேசம் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்டிருப்பவர்கள் சூரத், ஜாபர் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும், இவர்களது பின்னணியில் யாரேனும் இருக்கிறார்களா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி 10க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு சுமார் 40 சவரன் தங்க நகைக் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதில் ஈடுபட்டவர்கள்தான் இன்று மீண்டும் சென்னை வந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு தப்பிச் செல்ல முயன்றபோது மூன்று மணி நேரத்தில் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் எப்படி கிடைத்தது என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து திருவான்மியூர், பெசன்ட் நகர், சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, மீனம்பாக்கம் என ஆகிய அடுத்தடுத்து 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் பதிவாகியிருக்கிறது. இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் சென்னையை விட்டு தப்ப முயன்ற வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செயின் பறிப்புக்கு உள்ளானவர்கள், அடுத்தடுத்து காவல் நிலையங்களில் புகார் அளிக்கக் குவிந்ததால், காவல்துறையினர் எச்சரிக்கை அடைந்தனர். புகாரின் பேரில் சுமார் 20 சவரனுக்கு மேல் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உடனடியாக சென்னை சைபர் கிரைம் போலீஸார் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளுடன் ஆய்வுகள் மேற்கொண்டபோது, மீனம்பாக்கம் சாலை விமான நிலையத்தில் அருகே இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்வது பதிவாகியிருந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், கொள்ளையர்களைக் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தற்போது போலீசார் இருவரையும் தனித் தனி அறையில் வைத்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.