மோகன்லாலுக்கே பாதுகாப்பு இல்லை... பாஜகவை விமர்சிக்கும் ரசிகர்கள்!
சிஎஸ்கே - ஆர்சிபி மோதல்: ரசிகர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய சிஎஸ்கேவும் இன்று சேப்பாக்கம் திடலில் மோதிக்கொள்ள உள்ளன.
சிஎஸ்கே - ஆர்சிபி நேருக்கு நேர் புள்ளிவிவரம்
ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இதுவரை நேருக்கு நேர் 34 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் 21 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 11 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன.
இதையும் படிக்க: எம்.எஸ்.தோனியின் பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் இப்படி நினைப்பது சரியா? அம்பத்தி ராயுடு சொல்வதென்ன?
இரு அணிகளுக்கும் இடையில் சென்னை சேப்பாக்கம் திடலில் இதுவரை 9 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 8 வெற்றிகளுடன் சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் அறிமுக சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸை ஆர்சிபி சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்தியுள்ளது.
சிஎஸ்கேவின் கோட்டையாகத் திகழும் சேப்பாக்கத்தில் தனது தொடர்ச்சியான தோல்விகளுக்கு ஆர்சிபி முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஆர்சிபி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்றையப் போட்டியிலும் வெற்றி பெற்று சேப்பாக்கம் தனது அசைக்க முடியாத கோட்டை என்பதை சிஎஸ்கே உறுதிபடுத்துமா என்ற எதிர்பார்ப்பில் சிஎஸ்கே ரசிகர்கள் உள்ளனர்.
சமபலத்துடன் காணப்படும் இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெறவுள்ள இன்றையப் போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.