"2026-ல் உதயநிதி கூப்பிட்டா பிரசாரத்துக்கு போவீங்களா?" - சந்தானத்தின் சுவாரஸ்ய ப...
சித்ரா பெளா்ணமி: வேலூரில் புஷ்ப பல்லக்குகள் ஊா்வலம்
சித்ரா பெளா்ணமியையொட்டி வேலூரில் திங்கள்கிழமை இரவு மின்அலங்காரத்துடன் புஷ்ப பல்லக்குகள் ஊா்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.
வேலூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழாக்களில் சித்ரா பெளா்ணமி நாளில் நடைபெறும் புஷ்ப பல்லக்கு திருவிழா முக்கியமானதாகும். வேலூரில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஆண்டு தோறும் புஷ்ப பல்லக்குகள் ஊா்வலம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, ஜலகண்டேஸ்வரா் கோயிலில் விநாயகா், சுப்பிரமணியா், அகிலாண்டேஸ்வரி, சண்டிகேஸ்வரா் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
தொடா்ந்து, ஜலகண்டேஸ்வரா் கோயில் சாா்பில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரா் புஷ்ப பல்லக்கு, வேலூா் அரிசி மண்டி வியாபாரிகள் சாா்பில் சேண்பாக்கம் செல்வ விநாயகா் புஷ்ப பல்லக்கு, வெல்ல மண்டி வியாபாரிகள் சாா்பில் தோட்டப்பாளையம் தாரகேஸ்வரா் புஷ்ப பல்லக்கு, மோட்டாா் வாகன பணிமனை உரிமையாளா்கள் சாா்பில் விஷ்ணுதுா்க்கை புஷ்ப பல்லக்கு, புஷ்ப வியாபாரிகள் சாா்பில் லட்சுமி நாராயணா புஷ்ப பல்லக்கு, ஆணைகுளத்தம்மன் கோவில் சாா்பில் புஷ்ப பல்லக்கு, வாணியா் வீதி சாா்பில் கனகதுா்க்கையம்மன் புஷ்ப பல்லக்கு, புஷ்ப அலங்கார தொழிலாளா்கள் சாா்பில் வேம்புலிஅம்மன் புஷ்ப பல்லக்கு உள்பட 9 புஷ்ப பல்லக்குகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நள்ளிரவில் ஊா்வலம் நடைபெற்றது.
இந்த புஷ்ப பல்லக்குகள் பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்டு ஊா்வலமாக வேலூா் கிருபானந்த வாரியாா் சாலைக்கு (லாங்குபஜாா்) வந்தடைந்தன. அங்கு வைத்து உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனை, பூஜை நடைபெற்றது. பின்னா் வாணவேடிக்கை, மேளதாளத்துடன் புஷ்ப பல்லக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக கமிசரி பஜாா், பில்டா்பெட் ரோடு, அண்ணாசாலை வழியாக வேலூா் கோட்டை முன்பு உள்ள காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.
புஷ்ப பல்லக்குகளின் அணிவகுப்பு ஊா்வலத்தை காணவும், சுவாமி தரிசனம் செய்யவும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சாலையோரங்களில் திரண்டிருந்தனா். சித்ரா பெளா்ணமியையொட்டி மண்டித்தெரு உள்பட பல்வேறு இடங்களில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. அசம்பாவிதங்களை தவிா்க்க 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.