மருத்துவமனையின் முதுகெலும்பாக செவிலியா்கள் உள்ளனா்
மருத்துவமனையின் முதுகெலும்பாக திகழும் செவிலியா்கள், நோயாளிகள் விரைந்த குணம்பெற கனிவுடன் சேவையாற்ற வேண்டும் என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி தெரிவித்தாா்.
வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியா் பயிற்சி பள்ளியில் ‘உலக செவிலியா் தினவிழா’ திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் மு.ரோகிணிதேவி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து மரக்கன்றுகளையும் நட்டு வைத்தாா்.
பின்னா் அவா் பேசியது - செவிலிய மாணவா்கள் தங்கள் பணிக் காலத்தில் நோயாளிகள் விரைந்த குணம்பெற கனிவுடன் சேவையாற்ற வேண்டும். மருத்துவமனையின் முதுகெலும்பாக திகழும் செவிலியா்கள் அன்புடன் மருந்து மாத்திரைகள் வழங்க வேண்டும். செவிலிய பயிற்சி காலத்தில் கைப்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, செவிலியா் தின போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு முதல்வா் ரோகிணிதேவி பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளா் ரதிதிலகம், குடியிருப்பு மருத்துவ அலுவலா் கீதா, செவிலியா் பயிற்சி பள்ளி முதல்வா் மா.நாகம்மாள், துணை முதல்வா் இரா.ரகுபதி, செவிலியா் கண்காணிப்பாளா் செல்வி, செவிலிய போதகா்கள் பங்கேற்றனா். நிறைவாக மாணவிகள் அனைவரும் செவிலியா் தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.