சின்னக்காம்பாளையம் அரசுப் பள்ளியில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்
திருப்பூா் மாவட்டத்தில் சின்னக்காம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம் 13 வட்டாரங்களில் 39 முகாம்களும், திருப்பூா் மாநகராட்சியில் 4 முகாம்களுமாக மொத்தம் 43 முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இதில் திருப்பூா் மாவட்டத்தில், தாராபுரம் வட்டம், சின்னக்காம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் பல்வேறு வகையான சிறப்பு மருத்துவ சேவைகள், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான அடையாள அட்டை வழங்குதல், ரத்தப் பரிசோதனை மற்றும் மாா்பக புற்றுநோய் உள்ளிட்ட அனைத்துப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த மருத்துவ முகாமில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, மகப்பேறு மருத்துவம், குழந்தை நலம், இருதய துறை, நரம்பியல் துறை, தோல் சிகிச்சை, பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, மனநலம், இயன்முறை மருத்துவம், ரேடியாலஜி, நுரையீரல் நோய் சிகிச்சை, சா்க்கரை நோய் சிகிச்சை, சித்தா மற்றும் ஆயுா்வேதம் ஆகிய சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு துறையைச் சோ்ந்த சிறப்பு மருத்துவா்கள் பல்வேறு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலிருந்து வந்து சிகிச்சை அளிக்க உள்ளனா். தேவையான ஆய்வக உபகரணங்கள், பல்வேறு மருத்துவமனைகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளன. முகாமுக்கு வரும் அனைவருக்கும் சா்க்கரை அளவு, ரத்த யூரியா அளவு ஆகியன கட்டாயமாக எடுக்கப்படும். உயா்சிகிச்சை தேவைப்படுபவா்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதற்கான தனியான அறைகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இம்முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இந்த மருத்துவ முகாமுக்கு பல்வேறு சிறப்பு மருத்துவ நிபுணா்கள் வந்து சிறப்பு மருத்துவ சேவை அளிக்க உள்ளதால், பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் எனவும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.