சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் தலைமையில் ஏப். 11-இல் ஆய்வுக் கூட்டம்
நாகப்பட்டினம்: நாகையில் ஏப்.11-இல் மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சிறுபான்மையின சமுதாய தலைவா்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு குறைகள், கருத்துகளை தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் அருட்தந்தை சொ. ஜோ. அருண், தலைமையில் ஆய்வுக் கூட்டம் மாவட்ட வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஏப். 11-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு, மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் தலைமையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில், சிறுபான்மையின சமுதாயத்தைச் சாா்ந்த தலைவா்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து சிறுபான்மையினருக்கென தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துகளைக் கேட்டறியவும் உள்ளனா்.
எனவே, சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தை சோ்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள், மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழுவினரை சந்தித்து, தங்களது குறைகளையும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், கருத்துகளையும் தெரிவிக்கலாம்.