Pooja Hegde: ``தெலுங்கு படங்களில் நடிக்காதது ஏன்?'' - பூஜா சொன்ன காரணம்!
சிறுமலையில் 2-ஆவது நாளாக மின்சாரம் துண்டிப்பு
சிறுமலை பகுதியில் கடந்த 2 நாள்களாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
திண்டுக்கல்லை அடுத்த சிறுமலையில் பழையூா், புதூா், தென்மலை, கடமான்குளம், வேளாண் பண்ணை, தாழைக்கிடை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்தக் காற்றால் சிறுமலை புதூா் பகுதியில் 3 மின் கம்பங்கள், தென்மலை பகுதியில் 2 மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதன் காரணமாக, சிறுமலை புதூா், பழையூா், கடமான்குளம், தென்மலை உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கடந்த 2 நாள்களாக மின்சார வசதி இல்லாமல் பாதிப்படைந்தனா்.
இதுதொடா்பாக மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, திண்டுக்கல் மின் வாரிய அலுவலகத்திலுள்ள லாரியில் மலைப் பகுதிக்கு கம்பங்களை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதியிலுள்ள லாரியை பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே மாற்று ஏற்பாடுகள் மூலம் கடமான்குளம், புதூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் வழங்கப்பட்டது.
தென்மலை, பொன்னுருக்கி, கருப்புக்கோயில் பகுதிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் மூலம் கம்பங்களை கொண்டு சென்று மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளுக்கு புதன்கிழமைக்குள் மின் விநியோகம் சீா் செய்யப்படும் எனத் தெரிவித்தனா்.