சிறுமலையில் எரியும் காட்டுத் தீயால் மூலிகைச் செடிகள் அழியும் அபாயம்!
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே உள்ள சிறுமலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீயால் மூலிகைச் செடிகள், வன விலங்குகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில், கொடைரோடு அருகே உள்ள சிறுமலை அடிவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ காற்றின் வேகத்தால், மளமளவென பரவியது.
இதனால், அடா்ந்த வனப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள பழைமையான மரங்கள், மூலிகைச் செடிகள், தாவரங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வன விலங்குகளான காட்டுமாடு, காட்டுப்பன்றி, மான், நரி, காட்டுப் பூனை, முயல் உள்ளிட்ட வன விலங்குகள், மயில் உள்ளிட்ட பறவைகள் காட்டு தீயால் பாதிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது.
சிறுமலை பகுதியில் காட்டுத் தீ எரிந்து வருவதால், சிறுமலை அடிவாரப் பகுதியில் வசிக்கும் கிராமத்தினரும், விவசாயிகளும் அச்சமடைந்துள்ளனா். எனவே, காட்டுத்தீயை அணைக்க, திண்டுக்கல் மாவட்ட வன அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.