சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய குண்டூசி அகற்றம்
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய குண்டூசியை மருத்துவா்கள் பாதுகாப்பாக அகற்றினா்.
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் தேவி மீனாள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியைச் சோ்ந்த சத்யா மகன் செல்வம் (13) என்பவா் தவறுதலாக குண்டூசியை விழுங்கியுள்ளாா். சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வலது நுரையீரல் மூச்சுக் குழாயில் அந்த குண்டூசி இருப்பதை கண்டறிந்தனா்.
இதையடுத்து காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவா் கிருஷ்ண சுந்தரி தலைமையில் மயக்கவியல், கதிரியக்க, இருதயம், நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணா்கள் கொண்ட குழுவினா் நவீன டெலிப்ரான்ஸ்கோப் கருவி மூலம் மூன்று சென்டிமீட்டா் அளவுள்ள குண்டு ஊசியை பாதுகாப்பாக அகற்றினா் என்றாா்.
பேட்டியின் போது, மருத்துவக் கண்காணிப்பாளா் ராஜ்குமாா், உறைவிட மருத்துவ அலுவலா் ஸ்ரீ லதா, காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவா் கிருஷ்ணசுந்தரி, மருத்துவா்கள் உடனிருந்தனா்.