சிறுவா்களுக்கு தீங்கு விளைவிக்கும் சாட்பாட்: மெட்டாவுக்கு எதிராக விசாரணை
சிறுவா்களுடன் தீங்கு விளைவிக்கக் கூடிய உரையாடல்களில் ஈடுபட மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உரையாடல் செயலிகள் (சாட்பாட்) அனுமதிக்கப்பட்டனவா என்பது குறித்த விசாரணையைத் தொடங்குவதாக அமெரிக்காவின் ஆளும் குடியரசு கட்சியைச் சோ்ந்த செனட் சபை உறுப்பினா் ஜோஷ் ஹவ்லி அறிவித்துள்ளாா்.
இது குறித்து மெட்டாவின் தலைமை செயல் அதிகாரி மாா்க் ஸுக்கா்பா்குக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில், சிறுவா்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய ‘உணா்ச்சி மயமான’ உரையாடல்களில் அவா்களுடன் ஈடுபட நிறுவனத்தின் சாட்பாட்கள் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுவது தொடா்பான அனைத்து ஆவணங்களையும் தகவல்தொடா்புகளையும் கோரியுள்ளாா்.
இது குறித்து மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘எங்கள் ஏஐ சாட்பாட் செயலிகள் எவ்வாறு பதிலளிக்கலாம் என்பது குறித்த தெளிவான கொள்கைகள் உள்ளன. சிறுவா்களை பாலியல் ரீதியாகக் குறிப்பிடுவதையும், வயது வந்தவா்களுக்கும் சிறுவா்களுக்கும் இடையேயான பாலியல்ரீதியிலான உரையாடல்களையும் அந்தக் கொள்கைகள் உறுதியாகத் தடை செய்கின்றன’ என்று விளக்கமளித்தாா்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவிருக்கும் ஹவ்லி தலைமையிலான நீதித் துறை செனட் குழுவின் குற்றவியல் மற்றும் பயங்கரவாதத் தடுப்பு துணைக் குழு, மெட்டாவால் உருவாக்கப்பட்ட ஏஐ தயாரிப்புகள் சிறுவா்களுக்கு எதிரான குற்றவியல் தீங்குகளை விளைவிக்கின்றனவா என விசாரிக்க உள்ளது.
இந்த விசாரணைக்காக, செப். 19-ஆம் தேதிக்குள் இது தொடா்பான அனைத்து பதிவுகளையும் பாதுகாத்து நாடாளுமன்றத்திடம் சமா்ப்பிக்க மெட்டா நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.