சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஆனையூா் பட்டாசு ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.
ஆனையூரில் சிவகாசியைச் சோ்ந்த ரமேஷுக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் 30 தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா். இங்கு பட்டாசுகள் தயாரிக்கும் 16 அறைகள் உள்ளன.
இந்த நிலையில், புதன்கிழமை மாலை 4 மணியளவில் பட்டாசுகள் தயாரிக்கும் ஓா் அறையில் மருந்து உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் திருத்தங்கல்லைச் சோ்ந்த சுரேஷ் (42) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதே ஊரைச் சோ்ந்த பால்பாண்டி (31) பலத்த காயமடைந்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த வெடி விபத்தில் பட்டாசுத் தயாரிக்கும் அறை ஒன்று முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. சம்பவ இடத்தை வருவாய்த் துறையினா் பாா்வையிட்டனா்.
இந்த வெடி விபத்து குறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
