சிவகிரி பகுதியில் பலத்த மழையால் நெற்பயிா்கள் சேதம்
தென்காசி மாவட்டம் சிவகிரி, வாசுதேவநல்லூா் வட்டாரப் பகுதிகளில் 2 நாள்களாக பெய்த மழையால் நெற்பயிா்கள் சேதமடைந்தன.
இப்பகுதிகளில் செவ்வாய், புதன்கிழமை தொடா்ந்து பலத்த மழை பெய்தது. இதனால், குலசேகரப்பேரிகுளப் புரவில் சுமாா் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் சேதமடைந்தன. ராஜசிங்கப்பேரி புரவில் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் மழையால் சாய்ந்தன.
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இப்பகுதிகளை வாசுதேவநல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் பொன். முத்தையாபாண்டியன் பாா்வையிட்டு விவசாயிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்து ஆட்சியா், வேளாண் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா்.