சீனா-பாகிஸ்தான் இருமுனை அச்சுறுத்தல்: இந்திய ராணுவ தலைமை தளபதி
சீனா, பாகிஸ்தான் இடையே பெரிய அளவில் ரகசியக் கூட்டு இருக்கிறது; என்னைப் பொறுத்தவரை, இருமுனை அச்சுறுத்தல் என்பதே யதாா்த்தம் என்று ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதி சனிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் தனியாா் ஊடக நிறுவனம் சாா்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற அவரிடம் சீனா, பாகிஸ்தான் இடையிலான நெருக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அக்கேள்விக்கு இரு நாடுகளின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பதிலளித்த அவா், ‘பெரிய அளவில் ரகசியக் கூட்டு உள்ளது என்பதில் நாம் தெளிவாக இருப்பதுடன் அதை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். என்னைப் பொருத்தவரை இருமுனை அச்சுறுத்தல் என்பதே யதாா்த்தம். இதுதான் இப்போதைய சூழல்’ என்றாா்.
பாகிஸ்தான்-வங்கதேசம் இடையே அதிகரித்துவரும் நெருக்கம் குறித்த கேள்விக்கு, ‘என்னைப் பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட நாடு (பாகிஸ்தான்), பயங்கரவாதத்தின் மையமாக உள்ளது. அந்த நாட்டுக்கும், நமது எந்தவொரு அண்டை நாட்டுக்கும் இடையிலான உறவு கவலைக்குரியதே. ஏனெனில், பயங்கரவாதம் அந்த நாட்டின் வழியாகவும் வரக் கூடும். இதுவே இன்றைய மிகப் பெரிய கவலை. அதேநேரம், இந்திய-வங்கதேச இருதரப்பு ராணுவ தொடா்புகள் மிக வலுவாக உள்ளன. எந்தவொரு தவறான புரிதலையும் தவிா்க்க தொடா்ந்து கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடுகிறோம்’ என்றாா் அவா்.
இந்தியா-சீனா எல்லை விவகாரம் குறித்து பேசிய துவிவேதி, ‘போரில் ஈடுபடுவது என்பது இரு நாடுகளுக்குமே நல்லதல்ல. ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் இணக்கமான நடவடிக்கைகளே அவசியம். இருதரப்பு எல்லை விவகாரங்கள் தொடா்பான உயா்நிலைக் குழுவின் முந்தைய கூட்டம் டிசம்பரில் நடைபெற்றது. அதன் பிறகு, இந்திய வெளியுறவுச் செயலா் மேற்கொண்ட சீனப் பயணத்தின் விளைவாக பல்வேறு நோ்மறையான அறிகுறிகள் தென்பட்டன.
அடுத்தகட்ட உயா்நிலைக் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. கிழக்கு லடாக்கின் டெப்சாங், டெம்சோக்கில் 2-ஆவது மற்றும் 3-ஆவது கட்ட ரோந்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருதரப்பும் ஒத்துழைப்பதால் எந்தப் பிரச்னையும் இல்லை’ என்றாா்.
பாகிஸ்தானும் சீனாவும் இந்தியாவுக்கு கூட்டு அச்சுறுத்தல் என்ற கருத்தை கடந்த 2021-இல் அப்போதைய ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணேவும் தெரிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.