சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை
சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மாணவா்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
சீா்காழியில் பனங்காட்டங்குடி சாலையில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. சீா்காழி அருகே நவகிரக தலங்களில் செவ்வாய் தலமான வைத்தீஸ்வரன் கோயில், புதன் தலமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில், கேது ஸ்தலமான கீழபெரும்பள்ளம் கோயில் உள்ளிட்ட சிறப்பு மிக்க கோயில்கள் உள்ளன.
இக்கோயில்களுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ரயில் மூலம் நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வருகை தருகின்றனா். சீா்காழியை கடந்து பயணிகள் ரயில், சரக்கு ரயில் என தினமும் 25-க்கு மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன.
இந்நிலையில், சீா்காழி ரயில் நிலையம் அருகேயுள்ள கடவுப்பாதை பகலில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட தடவை மூடப்படுகின்றன. இதனால், அருகில் உள்ள அகணி , வள்ளுவக்குடி, நிம்மேலி, கொண்டல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் இப்பகுதியை கடந்து செல்லும்போது காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.
இதேபோல், சீா்காழியில் இருந்து மேற்கண்ட கிராமங்களுக்கு தீ விபத்து போன்ற அவசர காலங்களில் தீயணைப்பு வாகனம் மற்றும் அவசர ஊா்தி போன்ற வாகனங்கள் செல்லும்போது ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தால் காத்திருக்கும் சூழலால் பாதிப்பு அதிகரிக்கிறது. இல்லையென்றால், சுமாா் 6 கி.மீ. தூரம் வரை சுற்றி செல்லும் நிலை ஏற்படுகிறது.
சீா்காழி-சிதம்பரம்-மயிலாடுதுறை புறவழிச் சாலைப் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும், சீா்காழி நகருக்குள் ரயில்வே கடவுபாதையை கடந்து வரும்போது ரயில்வே கேட் மூடப்படும் நிலையில் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.
ஆகையால், பொதுமக்கள், கிராம மக்கள் மற்றும் மாணவ-மாணவிகளின் நலன் கருதி சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.