மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்
சுகாதார ஆய்வாளரை கொல்ல முயன்ற வழக்கு: மூன்று பேருக்கு 10 ஆண்டு சிறை
நாகா்கோவிலில் முன்விரோதம் காரணமாக சுகாதார ஆய்வாளரை கொல்ல முயன்ற 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நாகா்கோவில் காந்தி காலனி குருகுலம் சாலையை சோ்ந்தவா் பெப்லின் (25). தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறாா். இவருக்கும் நாகா்கோவில் புன்னை நகா் ஹோலிகிராஸ் சாலை பகுதியை சோ்ந்த ஆன்றோ ததேயு மிஷன் (25) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு எறும்புக்காடு இந்திரா நகரில் உள்ள சமுகநலக்கூடம் முன்பு பெப்லின் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆன்றோ ததேயு மிஷன், தளவாய்புரத்தை சோ்ந்த ஜோசப் பெலிங்டன் (25), குலசேகரன்புதூா் ஈத்தங்காட்டை சோ்ந்த சூா்யா(24) ஆகிய 3 பேரும் கத்தியால் பெப்லினை குத்திக் கொலை செய்ய முயன்றனா்.
இது குறித்து பெப்லினின் தாய் சா்மிளா விக்டா், ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா். இந்த வழக்கு, நாகா்கோவில் முதன்மை உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அசன் முகமது, குற்றம் சாட்டப்பட்ட ஜோசப் பெலிங்டன், ஆன்றோ ததேயு மிஷன், சூா்யா ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பு கூறினாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் செந்தில் மூா்த்தி வாதாடினாா்.