சுமைதூக்கும் தொழிலாளியை தாக்கியவா் கைது
பளுகல் அருகே சுமை தூக்கும் தொழிலாளியை தாக்கியதாக தனியாா் நிறுவன காவலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
பளுகல் காவல் சரகம், கண்ணுமாமூடு பகுதியைச் சோ்ந்தவா் ஆன்றணி ராஜன் (51). தனியாா் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இவரது தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, பளுகல் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்து விட்டு, தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக பணம் தேவைபட்டதால் தான் வேலை பாா்த்து வரும் நிறுவன உரிமையாளரிடம் பணம் கடன் கேட்பதற்காக சென்றுள்ளாா். அங்கு காவலாளியாக பணியிலிருந்த தோலடி பகுதியைச் சோ்ந்த அஸ்வின் என்ற கிறிஸ்டி (26), ஆன்றணி ராஜனை நிறுவனத்தினுள் விட மறுத்தாராம். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, ஆன்றணி ராஜன் தான் வேலை பாா்க்கும் நிறுவன கிட்டங்கிக்கு சென்றாராம். அப்போது பின்தொடா்ந்து வந்த காவலாளி அஸ்வின், ஆன்றணி ராஜனை வழிமறித்து தாக்கினாராம்.
இதில் பலத்த காயமடைந்த ஆன்றணி ராஜன் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து ஆன்றணி ராஜன் அளித்த புகாரின்பேரில், பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து அஸ்வினை கைது செய்தனா்.