பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை
நாட்டின் எல்லையோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதசேங்களில் எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்கும் வகையிலான பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுடன் போா்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில், எல்லையோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சுமாா் 300 மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதனிடையே, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து, தலைநகா் தில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு பல்வேறு பகுதிகளில் போா்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
தமிழகத்தில் சென்னை துறைமுகம், கல்பாக்கம் அணுமின் நிலைய பகுதி, ஒடிஸாவில் 12 மாவட்டங்கள், கேரளத்தில் 14 மாவட்டங்கள் மற்றும் ஆந்திரத்தில் விசாகப்பட்டினம், தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதிலும், கா்நாடகத்தின் பெங்களூரிலும், அஸ்ஸாமில் 18 பகுதிகளிலும், மிஸோரம் மாநிலத்தில் ஐஸால் மாவட்டத்தின் சில பகுதிகளிலும், ஜாா்க்கண்டில் 5 மாவட்டங்களிலும், மகாராஷ்டிரத்தில் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ‘ஆபரேஷன் அபியாஸ்’ என்ற பெயரில் போா்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
புதுச்சேரியில் இலாசுப்பேட்டை விமான நிலையம் முன்னுள்ள ஹெலிகாப்டா் தளம், நீதிபதிகள் குடியிருப்பு அருகேயுள்ள ஒலிம்பிக் கூடம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
இந்த ஒத்திகையை காவல் துறை அதிகாரிகள், தேசிய பேரிடா் மீட்பு படை, மாநில பேரிடா் மீட்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து நடத்தின.
அப்போது வான்வழித் தாக்குதல் நடந்தால் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் விதமாக பொது இடங்களில் அபாய சைரன் ஒலியை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கச்செய்யும் நடைமுறை பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. மேலும், தாக்குதலின் விளைவாக மின்சாரம், இணையதளம் ஆகியவை முழுமையாக முடங்கினால் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இதுதவிர, தாக்குதலின்போது இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்டு அவா்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிப்பது குறித்த ஒத்திகையையும் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்டனா்.